Viyagula Annai Shrine, Malayankulam

Thursday, June 21, 2018

Liturgical Schedule

ஆலயத்தின் அன்றாட நிகழ்வுகள்
தினமும் காலை 6.15 மணிக்கு திருப்பலியும், மதியம் 3.00 மணிக்கு இரக்கத்தின் ஆண்டவர் ஜெபமாலையும், (இதில் திருயாத்திரையாளர்களின் குறிப்பிட்டக் கருத்துக்களுக்காகவும், பொதுக் கருத்துக்களுக்காகவும் ஜெபிக்கப்படும்.) மாலை ஜெபமாலையும் நடைபெரும்.
வெள்ளிக் கிழமையில் மாலை 6.15 மணிக்குத் திருப்பலியும், திவ்விய நற்கருணை ஆசீரும் நடைபெறும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10.00 மணிக்கு ஜெபமாலையும், இதனைத் தொடர்ந்து குணமளிக்கும் நற்கருணை ஆராதனை, நவநாள் திருப்பலி மற்றும் புதுமை அசன விருந்து ஆகியவை நடைபெறுகின்றன.
ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 7.00 மணிக்கு திருப்பலி நடைபெறுகின்றது.

History of the Church


மலையன்குளமும் மாதா கோவிலும் :

ஈழத்தேத் தொழில் செய்தோர், உள்நாட்டில் உறைந்திருந்தோர் தங்கள் சொந்த பந்தங்களை நாடிச்சென்று தேவாலயம் அமைக்குப் பணிக்கு உதவி கேட்டு நிதி பெற்றனர். தேனீக்களாக சுழன்று சிறுகச் சிறுகச் கிடைத்த தொகையைக் கொண்டு ஆலயம் ஒன்றை மலையன்குளத்தில் கட்டினர். மாதவடியான் போத்தி என்பவர் ஒரு சாக்குப் பை நிறைய கிடைத்த காசுகளை ஈழத்தில் இருந்து கொண்டு வந்ததாக எம் பெரியோர் சொல்ல கேட்டிருக்கிறோம். அதன் மேற்கூறை தாக்கு என்று கூறுவர். அது வளைவாக அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுகள் பலவாகியும் அணுகளவும் பிசகாது இன்றும் காண்போர் கண்களைக் கவர்கின்ற வகையில் அமையப் பெற்றமையே எம் பாதுகாவலி வியத்தகு வியாகுல அன்னையின்  அற்புத சின்னமாக விளங்குகிறது. 1880 ஆம் ஆண்டிலே ஆலயம் கட்டப்பட்டு இயேசுவின் திருஇருதயத்திற்கு நேர்ந்தளிக்கப்பட்டது. திருச்சி மறைமாவட்டத்தின் அணைக்கரைப்பங்கின் இணைஊராக எம்மூர் சேர்க்கப்பட்டது. அணைக்கரை எம்மூரிலிருந்து பலகல்தொலைவிற்கு அப்பால் உள்ளது. அன்றைய நாட்களிலே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருமண வைபவங்களின் போதுதான் எம் ஆலயத்தில் திருப்பலிகள் நடைபெற்றிருக்கின்றன.
எம் மக்கள் மாதா மீது அளவு கடந்த பற்றுள்ளவர்கள். கத்தோலிக்க மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையே மாதா பக்திதான். இதோ! உன் தாய் என்று கல்வாரிக் குன்றிலே வசனித்த நம் ஆண்டவரது திருவாக்கை நினைவில் கொண்டோராய் எம்மக்கள் வியத்தகு வியாகுல அன்னையின் திருஉருவை நிர்மாணிக்க முயன்றனர். ஒரே மரக்கட்டையால் அமர்ந்த நிலையில் மாதாவின் திரு உருவம் உருவாக்கப்பட்டு அன்னையின் ஏழு வியாகுலங்களை நினைவு கூறும் வண்ணம் அன்னையின் இதயத்தில் ஏழு அம்புகள் ஊடுருவும் நிலையில் அன்னையின் அழகு திருஉருவம்  அமைக்கப்பட்டு  கோவிலிலே பூஜிதமாக நிறுவபட்டது. அன்றிலிருந்து எம் ஆலயம் வியாகுல மாதா ஆலயம் என்று அழைக்கப்பட்டது. எம்மூரில் காணப்படும் அன்னையின் திரு உருவம் போன்று வேறு எங்கேயும் காண இயலாது. 
புதிய மறைமாவட்டத்தில் எம் ஆலயம் :
தூத்துக்குடி மறை மாவட்டம் 1923 ஆம் ஆண்டு உதயமான அன்றுமுதல் ஆயராக சேசு சபை குருவானவர் இலத்தீன் ரீதியில் இந்திய சுதேசி ஆயர் மேதகு கபிரியேல் பிரான்சிஸ் திபூர்சியுஸ் ரோச் அவர்கள் 12.06.1923ல் ஆயராக நியமனமாகி 28.09.1923ல் அபிஷேகம் செய்யப்படலானார். 1937 ஆம் ஆண்டு அணைக்கரைப் பங்கிலிருந்து நாங்குனேரி என்ற புதிய பங்கு மே மாதம் முதல் நாளன்று உருவாக எம் ஊர் நாங்குனேரி பங்கின் 4ஆவது இணையூராக இணைத்துக் கொள்ளப்பட்டது. நாங்குனேரியிலிருந்து பங்கு குருவானவர் இரு மாதங்கள் அல்லது மூன்று மாதங்களுக்கொருமுறை வருவது வழக்கம். எம் ஊருக்கு அருகில் சற்று மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமையப் பெற்றுள்ள பத்தினிப்பாறை என்ற கிராமத்தில் மணப்பாடு திரு. அந்தோனி கோஸ்தா அவர்களது முயற்சியால் கட்டப்பட்ட லூர்து அன்னை கெபியும் ஆலயமும் எம்மக்களது மரியன்னை பக்திக்கு அதிக ஈடுபாட்டைக் கொடுத்து. 
எம்மூர் ஆலயத்தில் நடைபெற்று வந்த பக்தி முயற்சிகள் :
எம்மூரில் அமைந்துள்ள அன்னையின் தேவாலயம் எம்மக்களுக்கு ஒரு பெரிய அருள்வாய்க்காலாகவே விளங்கிற்று. ஒவ்வொரு நாளும் மாலை 6.00 மணிக்கு திரிகால மணி ஒலிக்கும். மக்கள் வேலைகளுக்குச் சென்று வீடு திரும்பியோரை கோவிலில் நடைபெறும் இரவு செபத்திற்கு அழைக்க நினைவூட்டுவதாக அந்த திரிகால மணியோசை அமையும். சற்று நேரங்கழித்து இரவு 7.00 மணிக்கெல்லாம்  கோவிலில் இரவு ஜெபம் நடைபெறும். கோவிலிலே ஒரு பெரிய குத்து விளக்கு உண்டு. அதனை ஒருவாரம் ஒருவரிக்காரர் வீதம் அதற்கு எண்ணெய் ஊற்றி திரிபோட்டு விளக்கு ஏற்;றுவர். வார இறுதி நாளன்று அதாவது சனிக்கிழமை காலையில் அதே வரிகாரர் கோவிலைக்கழுவி சுத்தம் செய்வதோடு குத்து விளக்கையும் தேய்த்து சுத்தம் செய்து விட வேண்டும். இரவு ஜெபம் முடிந்ததும் சிறியோர் தொடங்கி பெரியோர் வரை குத்து விளக்கில் உள்ள எண்ணையை தொட்டு நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்துச் செல்வர். வீட்டிலே வர இயலாதவர்களுக்கும் அவ்வெண்ணைத் தொட்ட விரலைக்காட்டி சிலுவை அடையாளம் செய்யும் வழக்கம் உண்டு. மாதா, இந்த எண்ணையைப் பூசுதல் வழியாக மன நோயை, உடல் நோயைப் போக்குவாள் என்ற நம்பிக்கை இந்த மக்களிடம் இருந்து வந்தது. 
கோவிலில் செபம் தொடங்குவதற்கு முன் நோய் வாய்ப்பட்டோர் வீட்டிலிருந்து  ஒரு செம்பிலோ, டம்ளரிலோ தண்ணீர் எடுத்து சென்;று மாதாவின் பாதத்தில் வைக்கப்பட்டு, செபம் முடிந்ததும் மாதாவின் பொற்பாதத்தை அந்த நீரால் தொட்டு துடைத்து அதனை வீட்டிற்கு எடுத்து செல்வர். இந்நீரை அருந்துவதன் மூலம் நோயை மாதா நீக்குவாள் என்ற நம்பிக்கை எம்மக்களது விசுவாசத்திற்கு உரமூட்டிற்று.
ஏதேனும் நோயினால் அவதிப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்கள் எம் கோவிலில் ஏழுநாட்கள,; 21 நாட்கள் தங்கி கோவிலில் உள்ள வேப்ப மரத்து இலையை மாதாவின் திருப்பாதத்தில் வைத்து ஜெபம் முடிடந்தப்பின் அதையெடுத்து அரைத்து மூன்று உருண்டை விழுங்கி, மாதாவின் கிணற்றில் குளித்து ஈரத்துணியோடு கோவிலை 7 முறை அல்லது 21 முறை சுற்றி வந்து செல்லும் வழக்கம் இருந்து வந்தது. 7 நாட்கள் கழித்து அல்லது 21 நாட்கள் கழிந்ததும் நோய்கள் நீங்கி  சுகமாக வீடு செல்லும் பழக்கம் எம்மக்களிடம் இருந்து வந்தது.
அன்னையின் ஆலய திருவிழா :
எம் அன்னையின் ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெற்று வருகிற வழக்கம் தொன்றுத்தொட்டு வழக்கத்தில் இருந்து வந்தது. எம் ஊர் ஆண்கள் வெளியூர்களில், குறிப்பாக ஈழத்தில் தங்கி பணிசெய்வோர் ஆண்டுக்கொரு முறை அல்லது ஈராண்டுக்கொருமுறை தம் மனைவி மக்களோடு கர்த்தர் பிறப்பு பெருவிழா, புத்தாண்டு தினம் போன்றவற்றைக் கொண்டாட வருவது வழக்கம். அத்தருணத்தில் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி மாதாவின் திருவிழா நடைபெற்று வந்தது. முடித்துவிட்டு பணிகளுக்கு செல்லும் வகையில் இவ்வாறு கொண்டாடப்பட்டு வந்தது.
காலஞ்சென்ற அருட்தந்தை ஸ்டீபன்தாஸ் அவர்கள் எம் ஊர் அருகில் உள்ள தோட்டாக்குடிக்கிராமத்தைச் சார்ந்தவர். இப்பங்கின் முதல் மூத்த குரு. தூத்துக்குடி மறை மாவட்டத்தில் உள்ள  இருமுறை மறை வட்ட அதிபராகவும் பின்னர் மறை மாவட்ட முதன்மைக் குருவாகவும் பணிபுரிந்தவர் அவர் நாங்குனேரி பங்குக் குருவாக 1956ல் பணி செய்த காலத்தில் அவரது அறிவுரைப்படி மாதா திருவிழாவை மாதாவின் வணக்க மாதமான மே மாதம் கொண்டாடி அதிலும் மே மாதம் 31ஆம் நாள் வணக்க மாதத்தின்  இறுதி நாளில்  திருவிழா கொண்டாட வேண்டும் என்று கூறினார்.  அவரது ஆலோசனைப்படி ஏறக்குறை அரை நூற்றாண்டுக்கு மேலாக அவ்வாறே திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. 
பூபாளம் பாடும் புதிய பங்கு :
எம்மூரில் உள்ள பக்தி முயற்சிகள் திருவிழா கொண்டாடும் பாங்கு நாங்குனேரி பங்குக் குருக்கள் பலரைக் கவர்ந்தது. அருட்தந்தை பன்னீர்செல்வம் 1983 - 89 ஆம் ஆண்டு நாங்குனேரி பங்குக்குருவாக பணியாற்றிய காலத்தில் எம் ஊரை பங்கு நிலைக்கு உயர்த்த முயன்றார். எனினும் அது இயலாது போனது. பின்னர் அருட்தந்தை ளு. ஜெரால்டு அவர்களின் முயற்சியால் மலையன்குளம் தனிப்பங்காக உயர்த்த மறைமாவட்டத்தால் முடிவு செய்யப்பட்டது. 1999 ஆம் ஆண்டு அருட்தந்தை ஜெரோசின் அவர்கள் காலத்தில் எம் ஊர் பங்காக உருவாகியது.  தூத்துக்குடி மறைமாவட்டத்தின் 96வது பங்காக எம் ஊர் உயர்த்தப்பட்டது. மேன்மை தங்கிய ஆயர் ளு.வு. அமலநாதர் ஆண்டகை அவர்களுக்கு எம் நெஞ்சம் நிறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 1999 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் எங்களுக்கு இரட்டை மகிழ்ச்சியைத் தந்த நன்னாள். எம் ஊர் புதிய பங்காக உருவான அன்று முதல் எம் ஊரில் அப்போஸ்தலர் இராக்கினி கன்னியர் இல்லம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. எம் ஊர் பங்கு தளத்தில்  பத்தினிப்பாறை, தோட்டாக்குடி, மருதகுளம், சகாயபுரம், நெல்லையப்பபுரம் போன்ற இணையூர்கள் இணைக்கப்பட்டன.
துறவற சபைக் குருக்களும் மலையன்குளமும்
மலையன்குளம் பங்கு 2003 ஆண்டு மே 22 ஆம் தேதி முதல் இறைவார்த்தை சபை குருக்கலால் பரிபாலிக்கப்பட்டு வந்தது. அவர்களது காலத்தில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் மாதாவின் பக்தி முயற்சிகளில் பங்கேற்பதற்காக பல்வேறுபட்ட இடங்களில் இருந்து எம் அன்னையின் திருத்தலத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எம் ஊர் யாருக்கும் தெரியதிருந்த நிலை மாறி இன்று மலையன்குளம் மாதா திருத்தலம் அறியாதோர் இல்லை எனும் அளவிற்கு அவர்களது அளப்பரிய பக்திப்பணி பாராட்டத்தக்கதாகும். நான்கு இறை வார்த்தை சபை குருக்கள் இங்கு உழைத்து மாதாவின் மகிமையை பார் அறிய பறைசாற்றி சென்றிருக்கின்றனர். அவர்களுக்கு நம் நெஞ்சம் நிறை நன்றிகள்.
மலையன்குளம் மீண்டும் மறைமாவட்டத்தில் :
இறைவார்த்தை சபை குருக்கள் 2010 ஆம் ஆண்டு முதல் எம்மூரைவிட்டு சென்றுவிட்டனர். 2010 ஆம் ஆண்டு மே மாதம்; 13 ஆம் நாள் முதல் எம் ஊர் மீண்டும் தூத்துக்குடி மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அருட்திரு. ஜெயகுமார் பங்கு பணிப்பொறுப்பை ஏற்றார். அவரைத் தொடர்ந்து அருள்தந்தை. இரத்தினராஜ் பங்குத்தந்தையாக சிறப்பாகப் பணியாற்றினார். அவரது காலத்தில் தான் புதுமைக் கொடிமரம் உருவாக்கப்பட்டு மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அவருக்குப் பின் மலையன்குளம் ஊரின் மண்ணின் மைந்தர் அருட்தந்தை ஆ.பு.விக்டர்  2013 முதல் 2018 வரையிலான காலத்தில் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். தற்போது 2018 ஜூன் 5ஆம் நாள் முதல் அருள்தந்தை. ஜஸ்டின் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வருகின்றார்.